பார்ஹம் சாலிஹ் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு

இராக்கின் புதிய அதிபராக  அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான  பார்ஹம் சாலிஹ்  நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூத்த மிதவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட சாலிஹ் , அந்நாட்டின்  இரண்டு முக்கிய குர்து கட்சிகளிடையே நடந்த வாக்கெடுப்புகளின் இறுதியில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.

குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி மற்றும் குர்திஸ்தான் தேசப்பற்று சங்கம் ஆகியவற்றுக்கிடையே நடந்த முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டதாக ஷியா பிரிவின் சட்டமன்ற உறுப்பினர் ஹமித் அல் மவ்சாமி தெரிவித்தார்.

58 வயதான  பார்ஹம் சாலிஹ், குர்திஷ் மிதவாத அரசியல்வாதி ஆவார். பிரிட்டனில் பொறியியல் கல்வி பயின்றவர்.

மேலும் இராக்கின் குர்திஸ் மாகாணத்தின் பிரதமராகவும், இராக் கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை பிரதமராகவும் சாலிஹ் இருந்திருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு இராக்கில் அமெரிக்கப் படையால் சதாம் உசேன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்நாட்டில் உள்ள மூன்று  இனவாதக் குழுக்கள் (ஷியா, சன்னி, குர்து) அதிகாரத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இவற்றில் அதிகாரமிக்க பதவியான பிரதமர் பதவியை ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களும்,  நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை சன்னி பிரிவினரும்,  அதிபர் பதவியை குர்து இனத்தைச் சேர்ந்தவர்களும் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment