ஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா?’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து மேத்யூஸ் கேப்டன் பதவியைப் பறித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். சந்திமால் இவருக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் இதற்கு ஏதோ நான் மட்டுமே காரணம் என்பது போல் காட்டுவது எனக்கு துரோகம் செய்வது போல் உணர்கிறேன். அனைத்து முடிவுகளையும் நான் அணித்தேர்வாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகியோருடன் பரஸ்பர புரிதலின் பேரில்தான் எடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

தேர்வாளர்களும் பயிற்சியாளரும் நான் ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லை என்ற அபிப்ராயம் கொண்டிருந்தால் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை, இந்த இரண்டு வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை பரிசீலிக்கிறேன்.

ஜூலை 2017-ல் நான் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன்சி பதவியைத் துறந்தேன் என்பதை நீங்கள் நினைவுகூரலாம். 5 ஆண்டுகள் இலங்கை அணியை வழிநடத்தினோம். இந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வென்றோம், ஆஸ்திரேலியாவுக்கு 3-0 என்று ஒயிட் வாஷ் கொடுத்தோம். ஆசியக் கோப்பையை 2014-ல் வென்றோம்.

ஆனால் அணிக்கு புதிய தலைமை தேவைப்பட்டது என்பதை உணர்ந்த போது நானே மனமுவந்து 2017-ல் கேப்டன்சியை அனைத்து வடிவங்களிலிருந்தும் துறந்தேன். அதன் பிறகு இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது, கேப்டன்களாக உபுல் தரங்கா, திசர பெரேரா, சமரா கபுகேதரா, லஷித் மலிங்கா, தினேஷ் சந்திமால் என்று முயன்றீர்கள். இதனையடுத்தே தலைமைப் பயிற்சியாலர் ஹதுரசிங்க என்னை சந்தித்து உலகக்கோப்பை 2019 வரை கேப்டன்சியை ஏற்குமாறு கேட்டார். ஆனால் என் குடும்பம், என் நெருங்கிய சகாக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஹதுரசிங்க மீது அயராத நம்பிக்கை கொண்ட நான் 2019 உலகக்கோப்பை வரை கேப்டன்சியை ஏற்க சம்மதித்தேன்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுமாராக ஆடிய பிறகே ஆசியக் கோப்பையில் இந்த தோல்விகள் அதிர்ச்சியளிப்பவைதான் மறுக்கவில்லை, ஆனாலும் உலகக்கோப்பைக்கு இன்னும் 12 போட்டிகள் இருக்கும் நிலையில் நான் என் பொறுப்புகளிலிருந்து ஓடிவிட விரும்பவில்லை. அதே போல் ஒரு வீரராக ஆட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பயின்று இலங்கை அணிக்காக ஆட நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

தேர்வுக்குழுவினரும் அணி நிர்வாகமும் நான் ஒருநாள், டி20 போட்டிகள் விளையாடத் தகுதியற்றவன் என்றால் சுமையாக இருக்க விரும்பவில்லை, ஓய்வு பெறுவதையும் பரிசீலிக்கிறேன். நான் ஆட்டத்தை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் ஆடி வந்திருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரு அணிகளிலும் சேர்த்தே நான் அதிக ரன்களை எடுத்திருந்தேன் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்நிலையில் இருக்கின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை அணியின் ஒருநாள், டி20 வடிவங்களின் தலைமைப்பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுகிறேன். தேர்வுக்குழுவின் பயிற்சியாளாரின் விருப்பத்திற்கேற்ப நான் ராஜினாமா செய்கிறேன். எது எப்படியோ என்னிடம் அவர்கள் பேசி இப்படியாக பொறுப்பிலிருந்து விலகும் வாய்ப்பை அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி நவில்கிறேன்.

நம் அணிக்கு என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment