பணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை

நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.’

இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன்.

“எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பதில் சொன்னேன்.

என்னிடம் கேள்வி கேட்டது நடுத்தர வயதில் இருக்கும் ஒரு பெண்… இல்லை திருநங்கை. முதன்முறையாக அவரைப் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது.

என்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா? ‘உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன், அது அதிகமாக இருக்கிறது, இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது’ என்று அவர் சொன்னது, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தினமும் ஒன்பது மணி நேரம் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நான், இதுபோன்ற வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய அச்சம் அதிகமானது.

இருந்தாலும், “சரி, நான் எவ்வளவு நேரம் இங்கு இருக்க வேண்டும், நாளைக் காலை எனக்கு அலுவலகம் செல்ல வேண்டும்” என்று அவரிடம் கேட்டேன்.

‘போ, போ… ஆபிசுக்கு போய் வேலைய பாரு… இங்க என்ன செய்ய வந்த? பெரிய இவன் மாதிரி பேசற?’ என்ற காட்டமான பதில் என்னை மெளனமாக்கியது. சில நிமிடங்களில் நான் விபச்சார சந்தையில் புதிதாக இறக்கப்பட்ட சரக்காகிவிட்டேன்.

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.

இவை ‘நவீன இந்திய ஆண்கள்’ பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? எனது மனசாட்சியை சாகடித்துவிட்டே இந்த தொழிலில் இறங்க நான் முடிவு செய்தேன். வசதியான நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், நான் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததே இல்லை. ஆனால், எனது தேவைகளே இந்த முடிவுக்கு என்னை தள்ளியது.

இப்போது என்னிடம் இயல்பாக பேசத் தொடங்கினார் அந்த திருநங்கை. “உன்னுடைய புகைப்படத்தை அனுப்பு, ஆளை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் கூப்பிட மாட்டார்கள்.”

இதைக் கேட்டதும் எனக்கு அவமானமாகிவிட்டது. என்னுடைய புகைப்படம் பொதுவெளியில் அனைவருக்கும் தெரிந்துவிடும்? யாராவது தெரிந்தவர்கள், உறவினர்களிடம் புகைப்படம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது? பிறகு என்னுடைய எதிர்காலம் என்ன ஆகும்? என்ற பதற்றம் ஏற்பட்டது. இந்தத் தொழிலில் இறங்கினால் பணம் சம்பாதிக்கலாம், யாருக்கும் இதைப் பற்றி தெரியாது என்று தானே நினைத்தேன்?

ஆனால், எனது தேவைகள் மீண்டும் என்னை அமைதியாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது. என்னை நிற்கவைத்து பல விதமாக புகைப்படங்கள் எடுத்தார்கள். இயல்பான, கவர்ச்சிகரமான, செக்ஸியான தோற்றத்தில் என பல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தேன்.

புகைப்படங்கள், என் கண் முன்னரே, வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டது. ‘புதிய சரக்கு, விலை அதிகம், அவசரமாக கொஞ்சம் பணம் தேவை, விலை குறைவில் வேண்டுமென்றால் வேறொருவரை அனுப்புகிறேன்.’

நான் பேரம் பேசப்பட்டேன். ஒரு இரவுக்கு எட்டாயிரம் ரூபாய் என்று முதல்கட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு, ஐந்தாயிரம் ரூபாயில் பேரம் முடிந்தது.

என்னை வாடகைக்கு எடுத்த வாடிக்கையாளர் விரும்பும் ‘எல்லாவற்றையும்’ நான் செய்ய வேண்டும். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் இது உண்மை. இது திரைப்படத்தில் நடைபெற்ற கற்பனையல்ல, உண்மையிலேயே என் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம்.

வாழ்க்கையில் இப்படிப்பட்ட வேலையை முதல் முறையாக செய்யப்போகிறேன். உணர்வுகளே இல்லாமல் எப்படி காதல் செய்வது? அதுவும் யாரென்று தெரியாத ஒருவருடன் எப்படி? இதுபோன்ற பல குழப்பங்கள் மனதில் எழுந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதுபோல் நடித்தேன். கம்பீரமான ஆண் தானே அழகு?

மஞ்சள் நிற டாக்ஸி ஒன்றில் ஏறி கொல்கத்தாவின் ஆடம்பரமான பகுதிஒன்றினுள் நுழைந்தேன். வீட்டில் இருந்த மிகப்பெரியகுளிர்சாதனப்பெட்டியில் மது பாட்டில்கள் நிறைந்திருந்தன! அங்கிருந்ததைப் போன்ற பிரம்மாண்டமான பெரிய தொலைகாட்சித் திரையை நான் இதுவரை பார்த்ததில்லை.

என்னை வரவழைத்த பெண் திருமணமானவர், சுமார் 32-34 வயது இருக்கும். அவர் என்னுடம் இயல்பாக பேசினார். “தவறான இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். என் கணவர் ஒரு கே (ஆணுடன் பாலியல் உறவு கொள்பவர்) அமெரிக்காவில் அவர் வாழ்கிறார், அவரால் எதுவும் செய்யமுடியாது. தனக்கும் குடும்பம் இருக்கிறது என்று சமூகத்தில் காட்டிக் கொள்வதற்காக என்னை திருமணம் செய்திருக்கிறார். எனவே விவாகரத்தும் செய்யமாட்டார். அவரது பாலியல் விருப்பத்துக்காக, பெயரளவில் என்னை திருமணம் செய்துக் கொண்டார். மனைவி என்ற அந்தஸ்தும், தேவையான வசதிகளும் இருக்கிறது. நானும் உணர்வுகள் நிரம்பிய ஒரு பெண் தானே? பாலியல் விருப்பங்களும், உடல்ரீதியான தேவையும் இருக்கிறது. வேறு வழியில்லை ” என்று தன் சோகக்கதையை அந்த பெண் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார்.

இருவரும் பாடல்களை ஒலிக்கவிட்டு, நடனம் ஆடினோம். சிறிது நேரம் கழித்து, நடனமாடிக் கொண்டிருந்த அறையில் இருந்து படுக்கையறைக்குச் சென்றோம்.

இதமாகவும், பதமாகவும் தன்னுடைய பாலியல் நடவடிக்கைகளால் என்னை தூண்டிய அவர், எல்லாம் முடிந்ததும் ‘ஏய், இங்கிருந்து சீக்கிரமாக வெளியேப் போ’ என்று வேண்டாவெறுப்பாக சொன்னார்.

பேசின தொகைக்கு மேல், நன்றாக வேலை செய்ததை பாராட்டும் வகையில் அதிக பணம் கொடுத்தார். “என்னுடைய கட்டாயத்தால் தான் இதுபோன்ற வேலைக்கு தள்ளப்பட்டேன்” என்று வருத்தத்துடன் சொன்னேன்.

அதற்கு அந்தப் பெண், ”உன்னுடைய கட்டாயத்தை உனக்கு மிகப்பிடித்தமான விருப்பமாக, பொழுதுபோக்காக மாற்றிவிடுவேன், நீ இந்தத் தொழிலுக்கு ஏற்றவன்” என்று சொன்னார்.

சரி, இப்படி நிமிடத்திற்கு நிமிடம் உணர்வுகளை மாற்றி மாற்றி பேசும் மனிதர்களிடம் பணத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். என் சொந்த ஊர், நான் இப்போது இருக்கும் கொல்கத்தாவில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனது தந்தை, வேலைக்கு சென்றதேயில்லை. இதுபோன்ற குடும்பப் பின்னணியில் எப்படியோ வளர்ந்தேன், எனக்கு படிப்பதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் எஞ்சினிரியங் தான் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டேன். பிறகு கொல்கொத்தாவில் வேலை கிடைத்தது. குடும்பத்தின் கஷ்டத்திற்காக நான் பணம் அனுப்பவேண்டும். எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்பது என் கனவு.

அலுவலகத்தில் அனைவரும் வங்கமொழிதான் பேசுவார்கள். மொழிப்பிரச்சனை, மற்றவர்கள் சரியாக நடந்து கொள்ளாதது என புது இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். அலுவலகத்தில் புகார் செய்தாலும், எந்தவித பயனும் ஏற்படவில்லை. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், கழிவறையில் சென்று அழுதுவிட்டு வருவேன். கார்டு மூலம் வெளியே செல்வதை கவனித்து, ‘இவன் எப்போதுமே தனது சீட்டில் இருப்பதில்லை’ என்று ஏசுவார்கள்.

நாளடைவில் என்னுடைய தன்னம்பிக்கை குறைந்துவிட்டது. மன சோர்வு என்னை சூழத்தொடங்கியது. மனநல் மருத்துவரை அணுகி ஆலோசனையும் செய்தேன். ஆனால், பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பொறுப்புகளும், பிரச்சனைகளும் என்னை சுமையாக அழுத்தின. பொழுதுபோக்குக்காக இணையதளத்தில் நேரம் செலவிடுவேன். நான் நன்றாக சம்பாதிக்கவேண்டும், அப்போதுதான் நான் விரும்பிய எம்.பி.ஏ படிப்பை படிக்கமுடியும், எனக்கு கொஞ்சமும் பிடிக்காத கொல்கத்தா நகரை விட்டு வெளியேற முடியும்.

இணையதளத்தின் மூலமாக, ஆண் நண்பன், ஜிகோலோ (male escort, Gigolo) என்ற வழி எனக்கு கிடைத்தது. திரைப்படங்களில் இதைப் பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொழிலைப் பற்றி புரியும்படி சொல்வது என்றால், பெண்களுக்கு தேவையான போது, ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம்.

ஜிகாலோவாக பணிபுரிவதற்காக ஆண்கள் தங்கள் சுயவிவரங்களைஉருவாக்கக்கூடிய சில இணையதளங்களும் இருக்கின்றன, ஆனால் அது உண்மையில் ஒரு வேலைக்கான வழக்கமான சுயவிவர தகவல்கள் அடங்கியது போன்று இருக்காது. உங்கள் தோற்றத்திற்கே இங்கு முன்னுரிமை.

முதலில் சுயவிவரம் எனப்படும் ‘புரஃபைலை’ எழுதத் தொடங்கியபோது கை நடுங்கியது, மனம் வெதும்பியது. ஆனால் என் முன் இரண்டு வழிகள் மட்டுமே இருந்த இக்கட்டான நிலையில் நின்றிருந்தேன்.

ஒன்று தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வது. மற்றொன்று தைரியமாக முன்னேறி ஜிகோலாவாகும் முடிவை எடுத்து வாழ்வை எதிர்கொள்வது. நான் இரண்டாவது தெரிவையே தேர்வு செய்தேன்.

விவாகரத்தான பெண்கள், கைம்பெண்கள், திருமணமாகாத பெண்கள்,திருமணமான பெண்கள் என பலவிதமான பெண்களும் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை ஒரு ஆணாக பார்க்கவில்லை, நிறைவேறாத தங்கள் உள்ளார்ந்த விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும் ஒரு கருவியாகவே கருதினார்கள்.

பேசும்போதும் நன்றாகவே பேசுவார்கள். திருமணமாகாத பெண்கள், என்னை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொல்வார்கள், திருமணமானவர்களோ, கணவனை விவாகரத்து செய்துவிட்டு என்னையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றும் அதற்கு நான் தயாரா என்றும் கேட்பார்கள்.

படுக்கையறையில் அவர்கள் விருப்பங்கள் நிறைவேறும் வரையில்தான் அவர்களின் பேச்சு இணக்கமாக இருக்கும். அதன்பிறகு என்னை பார்க்கும் பார்வை எரிச்சலாக மாறும். விரைவில் வெளியே துரத்தும் எண்ணம் வந்துவிடும். மனித மனங்களையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பேன்…

‘ஏய் வெளிய போ.’

‘பணத்தை எடுத்துகிட்டு சீக்கிரமா கிளம்பு’

இது போன்ற சாதாரண வார்த்தைகளை மட்டும் இல்லை, கேவலமான ஏச்சு பேச்சுக்களையும் வாங்கியிருக்கிறேன், ஏனென்றால் நான் தேர்ந்தெடுத்த தொழில் அப்படி…

சமூகம் எங்களிடம் இருந்து இன்பத்தையும் வேண்டுகிறது, கேவலமான வார்த்தைகளாலும் திட்டுகிறது. தங்கள் விருப்பங்களை தீர்த்துக் கொண்டது, அதற்கு உதவிய கருவியை பார்த்து அவர்களின் மனசாட்சி உறுத்தும்போல, என்ன இருந்தாலும் இது சமூகத்தின் பார்வையில் தவறாக பார்க்கப்படும் விருப்பம் தானே?

ஒரு முறை கணவன் இருக்கும்போதே ஒரு பெண் என்னை கூப்பிட்டிருந்தார். கணவன் சோபாவில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். நான் அவர் கண்ணுக்கு எதிரில் இருந்த படுக்கையில்,அவருடைய மனைவியுடன் இருந்தேன்.

நான் இதன் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால், சில பெண்கள் கணவனின் சம்மத்துடனே வேறு ஆண்களுடன் உறவு கொள்கின்றனர்!

50 வயதுக்கு அதிகமான பெண்களும் என்னுடைய வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதில் ஒரு பெண்ணுடனான அனுபவம் என் வாழ்க்கையிலேயே மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதுவே என்னை இந்தத் தொழிலில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கத் தூண்டியது.

அந்தப் பெண் என்னை அழைத்த நோக்கம் வேறு, ஆனால் என்னை மகனாகவே பாவித்தார் என்பது அதிர்ச்சியாக இருந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண், தனது கணவன், மகன், உறவினர்களிடம் இருந்து பிரிந்து வெகுதொலைவில் வாழ்கிறார்.

அந்த பெண்மணி என்னை மகனே, மகனே என்று அழைத்ததும், ஒரு மகனாகவே என்னை நடத்தியதும் ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த படுகுழியில் இருந்து விரைவிலேயே வெளியே வந்துவிடு என்று என்னிடம் கெஞ்சினார்.

இரவு முழுவதும் என்னுடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணி, காலையில் என்னை அனுப்பும்போது, முன்னரே தொலைபேசியில் பேசி முடிவு செய்திருந்த பணத்தை கொடுத்தார்.

எனக்கு அந்த பெண்ணை பார்க்கவே வருத்தமாக இருந்தது. உடல் தேவைகளுக்காக என்னை அழைத்தாலும், என்னைப் பார்த்ததும் அவரது மகனின் நினைப்பு வந்துவிட்டு மனம் மாறிவிட்டது. வாழ்க்கையில் அன்பின், குடும்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது. பணமும், செல்வாக்கும் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியை கொடுப்பதில்லை.

பணத்தின் தேவை தானே என்னையும் இந்தத் தொழிலுக்கு தள்ளியது. இதையெல்லாம் யோசித்து யோசித்து மனவேதனை அதிகரித்தது, மது அருந்தினேன். அம்மாவிடம் பேச வேண்டும் என்று ஆசை அதிகமாகிவிட்டது. அம்மாவுக்கு போன் செய்தேன்.

பேச்சுவாக்கில் இப்போதெல்லாம் பணம் அதிகமாக அனுப்புகிறாயே எப்படி என்று கேட்டதும், நான் விபச்சாரம் செய்கிறேன் என்று சொன்னதும் அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. “வாயை மூடு, குடிச்சிருந்தாலும், இப்படி கேவலமாக பேசாதே” என்று கடிந்து கொண்டு, போனை வைத்துவிட்டார்.

அம்மாவிடம் நான் உண்மையை சொல்லிவிட்டாலும், அதை குடிபோதையில் உளறியது என்று அம்மா அலட்சியப்படுத்திவிட்டார். அதைத்தவிர, நான் அனுப்பிய அதிகப் பணம் குடும்பத்திற்கும் தேவைப்பட்டது என்பதும் உண்மைதானே!

நான் அழுதேன். என் வாழ்க்கையையும், எனது மதிப்பையும் நினைத்து கலங்கினேன். அலுவலகத்தில் வேலை பார்ப்பது சமுதாயத்திற்காக. பணம் அதிகம் இருப்பவர்கள் என்னை உடல் தேவைக்காக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள், அதே பணம் என் குடும்பத்திற்கு தேவைப்படுகிறது. அப்படியென்றால் என் மதிப்பு வெறும் காகிதங்களில் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

இதன்பிறகு அம்மாவுடன் போனில் பேசுவதையே நிறுத்திவிட்டேன். உடல் சந்தையில் எனக்கு நல்ல ‘ரேட்’ இருந்தது. ஒரு கட்டத்தில் நான் கொல்கத்தாவிலேயே இருந்தால், எனது லட்சியமான எம்.பி.ஏவை ஒருபோதும் படிக்கமுடியாது என்பதை உணர்ந்துக் கொண்டேன். பகலில் அலுவலகம், இரவில் தொழில் என இதற்குள்ளே உழன்று கொண்டிருப்பேன், இதுவொரு புதைகுழி, இதிலிருந்து வெளியேறுவது சிரமம் என்பதை புரிந்துகொண்டேன்.

ஆனால் இந்த தொழிலில் வித்தியாசமான இயல்பு கொண்டவர்களை சந்திக்க நேர்ந்தது. சிலர் மனதில் காயங்களை ஏற்படுத்தினால், சிலர் உடலில் காயங்களை வடுவாக மாற்றி விட்டு செல்கிறார்கள். இதைப்பற்றி ஒரு ஜிகோலாவால் மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும். வெறும் வார்த்தைகளால் யாராலும் அதன் வலிகளை உணர முடியாது.

இந்த தொழிலில் இருந்து வெளியேறியது பற்றி எனக்கு எந்த வருத்தமும்இல்லை.

இப்போது எனது லட்சியமான எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு, கொல்கத்தாவில் இருந்து மிகத் தொலைவில் வேறொரு நகரத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன், ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலிக்கு கடந்த காலத்தைப் பற்றி எதுவும் தெரியாது, இதைப்பற்றி யாரிடமும் நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்.

அலுவலகத்தில் வேலை செய்கிறேன், திரைப்படங்களை பார்க்கிறேன், பாடல்களை ரசிக்கிறேன், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப்போகிறேன். நான் இயல்பான, சாதாரணமான ஆண்மகனாக இருப்பதாக உலகத்திற்கு காட்டிக் கொள்கிறேன்.

என்றாலும், கடந்தகாலத்தின் சுவடுகள் மனதின் ஒரு மூலையில் கனமாக படிந்திருக்கிறது. மிகவும் கொடூரமான அந்த நினைவுகள் நான் மரணிக்கும் வரை மரணிக்காது.

Related posts

Leave a Comment