அஷ்ரப்பை தேடுகிறார்கள்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மர­ணித்து இன்­றுடன் 18 வரு­டங்கள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளன. முஸ்லிம் காங்­கிரஸ் தோன்றும் வரைக்கும் முஸ்­லிம்கள் தனித்­து­வ­மாக அர­சியல் செய்­வ­தற்கு எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் இருக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தங்­களின் அர­சியல் நட­வ­டிக்­கை­களை தமிழ் மற்றும் சிங்­கள பேரி­ன­வாத கட்­சி­க­ளுடன் தான் மேற்­கொண்­டார்கள். ஆயினும் மிகக் கூடு­த­லாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­ட­னும்தான் முஸ்­லிம்­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன. இவ்­வாறு முஸ்­லிம்­களின் அர­சியல் இருந்த வேளை இக்­கட்­சி­களின் மூல­மாக தெரிவு செய்­யப்­பட்ட பெரும்­பா­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முஸ்­லிம்­களின் உரி­மைகள் பற்­றியோ, அபி­லா­ஷைகள் பற்­றியோ பேச முடி­ய­வில்லை.

இத்­த­கை­ய­தொரு அர­சியல் சூழலில் நாட்டில் ஏற்­பட்ட யுத்தம் முஸ்­லிம்­க­ளையும் பாதிக்கச் செய்­தது. இந்­நி­லை­யில்தான் முஸ்­லிம்­க­ளுக்கும் ஒரு தனித்­து­வ­மான அர­சியல் கட்சி இருப்­பது அவ­சி­ய­மென்று உண­ரப்­பட்­டது. இதன் விளை­வா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் தோற்­று­விக்­கப்­பட்­டது.

முஸ்­லிம்­களின் தனித்­துவ குர­லாக தோற்றம் பெற்ற முஸ்லிம் காங்­கிரஸ் மர்ஹும் அஷ்­ரபின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு மகத்­தான பணி­களைச் செய்­தது. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள், உரி­மைகள் பற்­றி­யெல்லாம் அவர் பாரா­ளு­மன்­றத்தில் பேசினார். இதனால், எங்­களைப் பற்­றியும் பேசு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தலைவன் உள்ளான் என்ற உணர்வு முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்­டது. ஆனால், இன்று முஸ்­லிம்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்கு காத்­தி­ர­மான எந்தக் குரலும் கிடை­யாது. முஸ்லிம் காங்­கிரஸ் மர்ஹும் அஷ்­ரபின் மர­ணத்தின் பின்னர் பல கட்­சி­க­ளாக உடைந்து போயுள்­ளது. எந்தக் கட்­சியும் முஸ்­லிம்­களின் குர­லாக செயற்­ப­ட­வில்லை. முஸ்லிம் கட்­சிகள் யாவும் போட்டி அர­சி­ய­லையே செய்து கொண்­டி­ருக்­கின்­றன. சமூக அர­சியல் படு­கு­ழியில் தள்­ளப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு குரல் கொடுப்­ப­தற்கு பதி­லாக பெரும் தேசி­ய­வாத கட்­சி­களின் வெற்­றிக்கும், அர­சாங்­கத்­திற்கும் குரல் கொடுக்கும் அமைப்­புக்­க­ளா­கவே முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. கடந்த உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்டம் உட்­பட பல இடங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட்­டது. இது கூட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே என்று ரவூப் ஹக்கீம் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தி­ருந்தார்.

மர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்­பாக குர்­ஆனும், ஹதீஸும் என பிர­க­டனம் செய்தார். ஆயினும் நூறு வீதம் இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இன்று கூட கட்­சியின் யாப்பு குர்ஆன், ஹதீஸ் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால், குர்ஆன், ஹதீ­ஸிற்கு மாற்­ற­மா­கவே பல நட­வ­டிக்­கைகள் காணப்­ப­டு­கின்­றன. மிகப் பகி­ரங்­க­மா­கவே பெரும் பாவங்­களைச் செய்­கின்­ற­வர்கள் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக இருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் தனித்­து­வ­மான கட்­சி­யாக தோற்றம் பெற்ற முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­களை அர­சியல் மயப்­ப­டுத்­தி­யது. இதனால் முஸ்­லிம்­க­ளி­டையே அர­சியல் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. மக்கள் மத்­தியில் மர்ஹும் அஷ்­ரபின் பேச்­சுக்கள் விடு­தலை உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வாதக் கட்­சி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட அநி­யா­யங்­களை அவர் வெளிச்சம் போட்டுக் காட்­டினார். இன­வாத ஒடுக்கு முறைக்கு எதி­ராக மர்ஹும் அஷ்ரப் குரல் எழுப்­பினார். இலங்கை – –இந்­திய ஒப்­பந்தம் முஸ்­லிம்­களின் முதுகில் எழு­தப்­பட்ட அடிமைச் சாசனம் என்றார். இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு அவ­சி­ய­மென்று வலி­யு­றுத்­தினார். முன் வைக்­கப்­படும் அர­சியல் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் அதி­காரம் வேண்­டு­மென்றார். முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம் பெற்ற போது வடக்கும், கிழக்கும் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் வடக்கும், கிழக்கும் நிரந்­த­ர­மாக இணைக்­கப்­பட வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களின் சம்­மதம் பெறப்­பட வேண்டும். வடக்­குடன் கிழக்கு நிரந்­த­ர­மாக இணைய வேண்­டு­மாயின் முஸ்­லிம்­க­ளுக்கும் அர­சியல் அதி­கா­ரமும், அதி­கார அலகும் தரப்­பட வேண்­டு­மென்று நிபந்­தனை விதித்தார். அத்­தோடு, கரை­யோர மாவட்­டத்­தையும் வலி­யு­றுத்­தினார்.

ஆனால், இன்றோ முஸ்­லிம்­க­ளுக்­காக பேசு­வ­தற்கே தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்ட போது யாரும் உடைக்­க­வில்லை என்றும், முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்ட போது இரண்டு குழுக்­க­ளுக்கு இடையே நடை­பெற்ற குழுச் சண்டை என்றும், முஸ்­லிம்­க­ளுக்கு பாதக­மா­க­வுள்ள சட்ட மூலத்தை அப்­படி ஒன்­று­மில்லை என்றும் கூறு­ப­வர்­க­ளா­கவே இன்­றைய தலை­வர்கள் உள்­ளார்கள்.

இன்று அர­சியல் தீர்வு ஒன்று முன் வைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு பற்றி சொல்­வ­தற்கு எந்­த­வொரு முஸ்லிம் கட்­சி­யி­டமும் தீர்வுத் திட்டம் கிடை­யாது. வெறும் கைகளை வைத்துக் கொண்டே முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட ஏனைய கட்­சி­களும் அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் கட்­சிகள் யாவும் அஷ்­ரபைப் பற்­றியே பேசிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், அஷ்ரபின் கொள்­கைளை பின்­பற்­று­வ­தில்லை. முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்பு கூட திருத்­தப்­பட்­டுள்­ளன. இன்­றுள்ள யாப்பில் கட்­சியின் செய­லா­ள­ருக்கு அதி­கா­ரங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தலை­மைக்கே அதிக அதி­கா­ரங்கள் உள்­ளன. மக்­க­ளுக்­காக கட்சி என்ற நிலை மாற்­றப்­பட்டு கட்­சிக்­கா­கவே மக்கள் என்­றா­கி­யுள்­ளது. இதுதான் முஸ்லிம் கட்­சி­களின் இன்­றைய நிலை­யா­க­வுள்­ளது.

மர்ஹும் அஷ்ரப் மிகவும் தைரியம் கொண்­ட­வ­ராக இருந்தார். அவர் எந்த வேளை­யிலும் எந்­த­வொரு பேரி­ன­வாதக் கட்­சியின் தலைவர் முன்­னாலும் தலை குனிந்து நின்­ற­தில்லை. 1994ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட சந்­தி­ரி­காவின் அர­சாங்­கத்தில் மிகவும் சக்­தி­மிக்க அமைச்­ச­ராக அவர் திகழ்ந்தார். அர­சாங்­கத்தின் அமைச்சர் என்­ப­தற்­காக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வற்றை தட்டிக் கேட்­கா­தி­ருக்­க­வில்லை. சந்­தி­ரி­காவின் அர­சாங்­கத்தின் காலத்­தில்தான் அவர் ஒலுவில் பல்­கலைக் கழகம், ஒலுவில் துறை­முகம், நிந்­த­வூ­ரி­லுள்ள மாவட்ட தொழில் பயிற்சிக் காரி­யா­லயம், குடிநீர் வச­திகள் போன்ற பாரிய அபி­வி­ருத்­தி­களைச் செய்தார். வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டார். தொழில் வாய்ப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்தார். ஆனால், இன்­றுள்ள முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், முஸ்லிம் அமைச்­சர்­களும் வார்த்­தை­யா­லேயே அபி­வி­ருத்­தி­களைச் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் பிர­தே­சங்­களை சிங்­கப்பூர், டுபாய் போன்று அபி­வி­ருத்தி செய்வோம் என்று சொல்லிக் கொள்­கின்­றார்கள். ஆனால், நிதி ஒதுக்­கீட்டில் 20 சத வீதம் கூட அதற்­காக ஒதுக்­கப்­ப­ட­வில்லை. மர்ஹும் அஷ்ரப் மர­ணித்து 18 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள போதிலும் முஸ்லிம் காங்­கி­ர­ஸா­லேயோ, வேறு கட்­சி­க­ளி­னா­லேயோ பாரிய அபி­வி­ருத்­திகள் நடை­பெ­ற­வில்லை. ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­களின் ஊருக்கு தேவை­யான ஒரு சில அபி­வி­ருத்­தி­க­ளையே மேற்­கொண்­டுள்­ளார்கள். மிகக் கூடு­த­லாக கொங்றீட் வீதி­க­ளையே அமைத்­துள்­ளார்கள். அபி­வி­ருத்­தி­க­ளையும், தொழில் வாய்ப்­புக்­க­ளையும் விற்றுப் பிழைக்கும் தர­கர்கள் போலவே அநே­க­மான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள்.

முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம் பெற்ற போது முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்கு இடையே பிர­தே­ச­வா­தங்கள் காணப்­பட்­டன. பிர­தே­ச­வாதம் முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்­திற்கு ஆபத்து என்று பிர­சாரம் செய்தார். அதன் பய­னாக ஒற்­றுமை வளர்க்­கப்­பட்­டது. கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளி­டையே காணப்­பட்ட முரண்­பா­டு­களை உட­னுக்கு உடன் தீர்த்து வைத்தார். அவர் ஒரு போதும் முரண்­பா­டு­களை வளர்க்­க­வில்லை. கருத்து பேதம் எனும் கறையான் நம்மை அழித்­து­வி­டு­மென்று தெரி­வித்தார். ஆனால், இன்று முஸ்லிம் காங்­கிரஸ் முதல் எல்லா முஸ்லிம் கட்­சி­களும் பிர­தே­ச­வா­தத்தை வளர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனால் ஒன்­றாக இருந்த இரண்டு ஊர்கள் பிள­வுண்டு நிற்­கின்­றன. முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளி­டையே பாரிய முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இந்த முரண்­பா­டு­களை வளர்க்­கின்ற வேலையை கட்­சி­களின் தலை­வர்­களே செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத்­த­கைய முரண்­பா­டுகள் இருந்­தால்தான் தலை­வ­ராக இருக்க முடி­யு­மென்ற கொள்­கையை முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் பின்­பற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மர்ஹும் அஷ்­ரபின் காலத்தில் கட்­சிக்குள் பாரிய பிள­வுகள் கிடை­யாது. ஒரு சிலர் கட்­சியை விட்டு வில­கி­யுள்­ளார்கள். சிலர் விலக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

ஆனால், மர்ஹும் அஷ்ரப் பேரி­ன­வாதக் கட்­சி­களில் இருந்த பலரை முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைத்துக் கொள்­தற்கு முயற்­சி­களை எடுத்து அதில் வெற்­றியும் கண்டார். முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த எம்.எம்.முஸ்­தபா, உது­மா­லெப்பை, றிஸ்வி சின்­ன­லெப்பை, செனட்டர் மசூர் மௌலானா உள்­ளிட்ட பலரை முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைத்துக் கொண்டார். இவ­ரது காலத்தில் கட்­சியில் இணைந்து கொண்­ட­வர்­களே அதி­க­மாகும். ஆனால், இன்று இந்­நிலை தலை­

கீ­ழா­கி­யுள்­ளது. முஸ்லிம் காங்­கி­ரஸின் வளர்ச்­சிக்கு ஆரம்பம் முதல் உழைத்த முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ், இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன்­அலி, முன்னாள் அமைச்சர் பசீர் சேகு­தாவூத், முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் அன்வர் இஸ்­மாயில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் ஜவாத் போன்ற இன்னும் பலர் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு வெளியே உள்­ளார்கள்.

இவர்கள் கட்­சியில் முக்­கிய பத­வி­களில் இருந்­த­வர்கள். கட்­சியின் தலை­மை­யுடன் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மா­கவே இவர்கள் பிரிந்து சென்­றார்கள்.

இன்று முஸ்­லிம்கள் மத்­தியில் பல கட்­சிகள் தோற்றம் பெற்­றுள்­ளன. எல்லா கட்­சி­களும் மர்ஹும் அஸ்­ரப்பின் வண்­ணப்­ப­டத்­திற்கு பின்னால் நின்று கொண்­டுதான் அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. அவ­ரது கொள்­கையின் பின்னால் யாரு­மில்லை. முஸ்லிம் அர­சி­யலில் எத்­தர்­கள்தான் அதி­க­மா­க­வுள்­ளார்கள்.

1988ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராக இருந்த ரண­சிங்க பிரே­ம­தாஸ முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவை வேண்­டினார். இன்­றுள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் போல் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பணத்தை கோர­வில்லை. மர்ஹும் அஸ்ரப் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு பாத­மாக காணப்­படும் 12 வீத வெட்டுப் புள்­ளியை 05 வீத­மாக மாற்ற வேண்­டு­மென்று கேட்டுக் கொண்டார். ரண­சிங்க பிரே­ம­தாஸ வெற்றி பெற்று வெட்டுப் புள்­ளியை 05 வீத­மாக்­கினார். ஆனால், இன்­றுள்­ள­வர்கள் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய கலப்பு தேர்தல் முறைக்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள். கண்­களை மூடிக் கொண்டு சட்ட மூலங்கள் பல­வற்றை ஆத­ரித்­தார்கள். இவற்­றை­யெல்லாம் பணத்தைப் பெற்றுக் கொண்டே செய்­தார்கள் என்று கட்­சியின் உறுப்­பி­னர்­களே பகி­ரங்­க­மாக குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­தார்கள்.

மர்ஹும் அஸ்­ரப்பின் பாச­றையில் வளர்ந்­த­வர்கள் என்று சொல்லிக் கொண்­ருக்­கின்­ற­வர்கள் அவரது கொள்கைகளை படிப்படியாக இல்லாமல் செய்து விட்டார்கள். இன்று கட்சியின் சின்னத்தில் தேர்தல் கேட்பதனை ஒரு அவமானமாகவே முஸ்லிம் கட்சிகள் கருதிக் கொண்டிருக்கின்றன. கட்சி என்பதும், தலைமை பதவி என்பதும் தேர்தலில் வெற்றி கொள்ளவும், பின்னர் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் பிரிந்து விடாதீர்கள் என்று மர்ஹும் அஸ்ரப் தெரிவித்து 18 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முஸ்லிம் அரசியலில் பல முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அவரது மரணத்தன்றே கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆளுக்கு ஆள் முரண்பட்டுக் கொண்டார்கள். அன்று தொடங்கிய முரண் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதே வேளை, இந்த 18 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டே வந்துள்ளது. இதற்கு இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களே காரணமாகும் . ஒரு சமூகத்திற்கு சிறந்த அரசியல் தலைவர் இருப்பது அவசியமாகும். நல்ல தலைவன் இல்லாத சமூகம் அதன் உரிமைகளை இழப்பதனை யாராலும் தடுக்க முடியாது. இதனால், முஸ்லிம்கள் இன்னுமொரு அஸ்ரப்பையே தேடுகின்றார்கள்.


சஹாப்தீன்
வீரகேசரி 2018-09-16.

Related posts

Leave a Comment