ஒரு கல்லில் மூன்று மாங்காய், அதாவுல்லாஹ், ஹரீஸ், கருணா ….

” வியூகங்கள் வகுப்பதில் மொட்டுக்கு நிகர் மொட்டே தான் “ எனலாம். அந்தளவு அதன் வியூகங்கள் கனமானதாக அமையும். கல்முனை – சாய்ந்தமருது விடயத்தில் அதன் வியூகம் அபாரமானது. இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற பிரதமர் மஹிந்தவுடனான கலந்துரையாடால் உறுதி செய்கிறது. இது வெற்றி பெற்றால் கணிசமான அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகளை மொட்டு கைப்பற்றும்.

இக் கலந்துரையாடலில் அதாவுல்லாஹ், கருணா, பா.உ ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் பா.உ ஹரீஸ் தனக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே அங்கு சென்றதாக கூறுகின்ற போதும், பிரதமருடனான கலந்துரையாடலில் அழைப்பில்லாமல் யாரும் எளிதில் சென்றிட இயலாது என்பதை அறியாதளவு நாம் சிறுபிள்ளைகளுமல்ல. இதுவே இந் நிகழ்வு அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதை துல்லியமாக்குகின்றது.

அழைப்படாமல் சென்றேன் என்பதன் மூலம் பா.உ ஹரீஸ் சமூகத்துக்காக தன் மானத்தை இழக்கும் தியாகியாக வெளிக்காட்டப்படுவார். தேர்தல் வந்துவிட்டதல்லவா? அவர் மொட்டு கட்சியுடன் எந்தவித கள்ள தொடர்பிலும் இல்லையாம் என்பதை நிறுவ முடியும். தான் இலகுவாக பாராளுமன்றம் செல்ல மு.காவில் ஆசனத்தை பெற முடியும். அல்லாது போனால் மேலுள்ளவைகளை இழக்க நேரிடும் என சுருங்க கூறிடலாம்.

அடுத்து அதாவுல்லாஹ்வின் பக்கம் வருவோம், அவர் சாய்ந்தமருது வாக்கில் கண் குத்தியுள்ளார். அவர் பந்துவீச தோடம்பழ ஆடுகளமும் சாதகமாகவே உள்ளது. சாய்ந்தமருது சபையை சாய்த்து கொடுத்தால் தனது வாக்கு வங்கியை பெருக்கிகொள்ளலாம். சாய்ந்தமருது சபையை பெற்றுக்கொடுத்தால் சாய்ந்தமருது மக்களின் கணிசமான வாக்குகளை அதாவுல்லாஹ் கைப்பற்றுவார். எப்படியோ வாக்கு மொட்டுக்கே!

சாய்ந்தமருதுக்கு சபை பெற்றுக் கொடுத்தால் கல்முனை மக்கள் கோவிப்பார்களே! கல்முனை முஸ்லிம் மக்களை பா.உ ஹரீஸ் பார்த்துகொள்வாரல்லவா. இதில் தமிழ் மக்களுக்கு எந்தவித பிரச்சினையுமல்ல. மாறாக நன்மை தான். எப்படி கேம்..? தமிழ் மக்களை என்ன செய்வது. இம் முறை கருணா அம்பாறையில் களம் காணப்போகிறார். அவருக்கும் மொட்டு ஏதாவது செய்தாக வேண்டும். அவரது அணியை பலப்படுத்த கல்முனை வடக்கு பிரதேச செயலக கதையை தூக்கிப் போட்டுள்ளார்கள்.

நான் மேலே கூறியுள்ளவைகளை வைத்து நோக்கினால் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளையும் கல்முனை தமிழ், முஸ்லிம்கள் வாக்குகளை முற்று முழுதாக கைப்பற்றும் வியூகம் நடந்தேறியுள்ளதை அறிய முடியும்.

அது சரி, இதெல்லாம் நடக்குமா? இன்னும் இருபது நாட்களில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிப்பு வெளி வாந்தால், யாரும், எதுவும் செய்ய இயலாது. இக் குறுகிய காலத்துக்குள் இந்த விடயங்கள் நடப்பது சாத்தியமற்றது. குழுவெல்லாம் நியமித்திருக்கின்றார்களாம். அப்படியானால் யோசித்து கொள்ளுங்கள். இதில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு. அவற்றையெல்லாம் இலகுவில் தீர்க்க இயலாது. முறையான பல கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும். விட்டுக்கொடுப்புடனான உடன்பாடுகளுக்கு வர வேண்டும். அதற்கு 20 நாள் என்பது மிகக் குறுகிய காலப்பகுதி.

இருந்தாலும், தேர்தல் அண்மையில் நெருங்குகையில் எதுவும் நடக்கலாம். தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டுமல்லவா? சரியோ, பிழையோ முன்னர் போன்று பா.உ ஹரீஸை அதீத பலமிக்கவராகவும் கணக்கிட முடியாது. எதுவுமே நடக்காது போனால், தாங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம். இத் தேர்தலில் எங்களை ஆதரவளியுங்கள், வென்றதும் தருவோமென்பார்கள். அவர்கள் தருவார்களென்றளவு அதீத நம்பிக்கையும் மக்களுக்கு ஊடக வாயிலாக ஊட்டப்பட்டுள்ளது. இந்த வியூகத்தை குறைவானதாக மதிப்பிட முடியாது. மொட்டுவால் முடியுமான உயரிய வியூகம். இவர்களின் வியூக வெற்றியை அங்கு அரசியல் செய்யும் மயில், மரக் கட்சிகள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றன என்பதை காலமே சொல்லும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Related posts

Leave a Comment