பாலைவனத்தில் பசுமை நகரம் – சீன அரசின் புதிய முயற்சி…!

சீனாவில் பாலைவனத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மரங்களை வளர்த்து ஒரு பசுமை நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித நடமாட்டமே அரிதிலும் அரிதான டக்லமகான் (TAKLAMAKAN) என்னும் மிகப்பெரிய பாலைவனத்தை ஒட்டியுள்ள நகர்தான் அக்சு.. இந்த நகரில் ஆண்டுக்கு சுமார் 100 நாட்கள் கடுமையான புழுதி புயல் வீசி அங்குள்ள மக்களை கடுமையான சிரமத்திற்குள்ளாக்கும். இதுபோன்ற சிக்கலில் இருந்து மீள ஒரு வனத்தையே உருவாக்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தை தீட்டியது சீனா.
இதற்காக அங்குள்ள மண்ணை பரிசோதிக்கும் போது, மரம் வளர்வதற்காக சாத்திய கூறே இல்லாமல் இருந்தது. இருப்பினும் நிச்சயம் மாற்றம் வேண்டும் என விரும்பிய சீன அரசு, கேகாயா பசுமை திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. இதன்மூலம் அந்த வறண்ட மண்ணில் மரம் வளர்ப்பதை சாத்தியப்படுத்த முயற்சித்தது சீன அரசு.
ஆனால் இதனை வகுக்கும் முன்னரே ஒரு தடங்கல் உண்டானது. மரம் வளர்வதற்காக சாத்தியம் அற்ற பகுதியாக அந்த பகுதி அமைந்திருந்தது. இதனை போக்க செயற்கை குட்டையை உருவாக்க அரசு முயற்சி செய்தது. இதற்காக நகர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கழுதைகள் மூலம் நீரை கொண்டு வந்து குட்டைகள் உருவாக்கப்பட்டன. இதனால் மண்ணில் இருந்த மலட்டுத்தன்மை விலகி மரம் வளர்வதற்கான சூழல் உருவானது.
இதன் பின்னர் மரம் நடும் பணியில் இறங்கிய அரசு, மக்கள் உதவியை நாடியது. மாணவர்கள், மருத்துவர்கள், அரசு பணியாளர், காவலர்கள் என அனைத்து தரப்பினரும் பல நாட்கள் அங்கு தங்கி மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். உண்பதற்கு உணவு கூட இல்லாமல் அந்த மக்கள் பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காதது.
இத்தனை துயரத்திற்கு பிறகு கிடைத்த பரிசுதான் இப்போது இருக்கும் இந்த அக்சு என்னும் அழகிய நகரம். ஒரு பக்கம் காடுகளை அழித்து இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் சமயத்தில், மறுபக்கம் ஒருகோடியே 30 லட்சம் மரங்களை வளர்த்து ஒரு வனத்தையே சீனா உருவாக்கியுள்ளது. ஆங்காங்கே பொறுப்பும், பொதுநலத்துடன் தனிநபரும், அரசும் மேற்கொள்ளும் நடவடிக்கை தான், அடுத்த சமுதாயத்தின் ஆணிவேராக அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாகியுள்ளது அக்சு நகரம்.

Related posts

Leave a Comment