காட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம்

 

இந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் நல்ல பல நடிகர்களை, அரசியலுக்கு கொடுத்திருக்கின்றது. இலங்கையின் அரசியலானது பல அரசியல்வாதிகளை நல்ல நடிகர்களாக உருவாக்கியிருக்கின்றது.

உருகி உருகி நடிக்கும் சிவாஜி கணேசன்களும், வில்லத்தனமான நம்பியார்களும், கவுண்டமணி – செந்தில்களும் அதேபோல் ‘அந்நியன்’ வேடம் ஏற்பவர்களும் நமது கதையில் நிறையவே இருக்கக் காண்கின்றோம்;.

அந்த வகையில் அடுத்த காட்சி மாற்றத்திற்கான முன்னோட்ட வேலைகள் இப்போது மெல்ல மெல்லத் தொடங்கி இருக்கின்றன. இந்த காட்சி மாற்றத்திற்கு ஆட்சி மாற்றம் என்று பெயர். அதே திரையில் பழைய கதையை புதிய பாணியில், நடிகர்களை மாற்றி, குணச்சித்திர பாத்திரங்களை உட்புகுத்தி, மக்கள் ஆணையைக் கேட்கும் ஒரு தேர்தலின் ஊடாக இது நிகழ்வதற்கான காலம் நெருக்கி வந்துள்ளது.

இன்றைய அரசாங்கம் தனது ஆயுட்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கரை வருடங்களில் பெரிதாக ஒன்றையுமே சாதிக்காமையால் வெற்றிகரமான ஆட்சியாக இதனைக் குறிப்பிடுவது சிரமமாகியுள்ளது. நாட்டு மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வழங்கிய மக்கள் ஆணையை மைத்திரி- ரணில் அரசாங்கம் திருப்திப்படும் விதத்தில் பயன்படுத்தாமல் விட்ட காரணத்தினால் மக்கள் மனங்களில் அதிருப்தி தேங்கிக் கிடக்கின்றது.

எனவே, ‘இந்த ஆட்சியும் சரியில்லை காட்சியும் சரியில்லை’ என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருந்தால் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எல்லாம் சுபமாக நடந்தேறியிருக்கும் என்று யாரும் அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது.

மக்களின் எண்ணம்

எவ்வாறு தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் இந்த அரசாங்கமும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததோ அதுபோலவே, 2015ஆம் ஆண்டில் புதிய அரசாங்கத்தை நிறுவி அதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் யுகாந்திரக் கனவையும், மைத்திரிபால சிறிசேனவின் சவாலையும் வெற்றிபெறச் செய்ய வைத்த முஸ்லிம்களின் சிவில், நிர்வாக, சமூக அபிலாஷைகளெல்லாம் ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை, மதவாதத்தை கூட அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் காலத்தை வீணே கடத்தியிருக்கின்;றது. இப்படியே ஏனைய மக்களும் மனம் கசந்து போயிருக்கின்றனர்.

ஆகவே, ஆட்சியை அல்லது ஆட்சியாளர்களை அன்றேல் அதன் தன்மையை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. திரையிட்ட திரைப்படம் சரியாக ஓடவில்லை என்ற உணர்வு கடைசிக் கட்டத்திலேயே தோன்றியிருக்கி;றது.

இதன் விளைவாக, புதிய திரைப்படக் காட்சி ஒன்றை திரையிடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாட்டு மக்கள் இப்போது எல்லாப் பிரச்சினைகளையும் மூட்டைகட்டிப் பரணில் போட்டுவிட்டு, தேர்தல் பற்றியே பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையிலும், பொதுஜனப் பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாhளராக முன்னாள் இராணுவ அதிகாரியும் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்தவருமான கோத்தாபய ராஜபக்ஷ (70 வயது) அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு அலை எழுந்திருக்கின்றது.

அரசாங்கம் இன்னும் மாகாண சபைத் தேர்தலை நடாத்தவில்லை. எல்லை மீள்நிர்ணய பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாமையால் இத்தேர்தலை நடத்த இயலவில்லை. இந்நிலையில், இப்போதைக்கு பழைய விகிதாசார முறைப்படியே மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியுமா? என்று பொருள்கோடல் கோரி உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சார்பாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது மாகாண சபைத் தேர்தலா முதலில் நடக்கும் என்பது உறுதியற்றதாக இருந்தாலும் கூட, நடப்பு நிலவரங்களை உற்றுநோக்குகின்ற போது ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும் சாத்தியம் அதிகமிருப்பதாகச் சொல்ல முடியும்.

முஸ்லிம்கள் ஏமாற்றம்

ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நாட்டிலுள்ள கணிசமான முஸ்லிம்கள் வரவேற்றனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையும் துரித அபிவிருத்தியும் இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம். அதனாலேயே 2010 ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான தமிழ் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்த போதும் முஸ்லிம்கள் ஆதரவளித்து, ஆட்சிபீடம் ஏற்றினர்.

அப்பேர்ப்பட்ட மஹிந்தவையே மெதமுலனவுக்கு அனுப்புவதற்கு, 2015இல் நாட்டு மக்களுடன் சேர்ந்து முஸ்லிம்கள் முன்னின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை திரைமறைவில் நின்று இயக்கியவர்கள் யாராக இருப்பினும் அதனை ராஜபக்ஷ ஆட்சி கண்டுகொள்ளவில்லை என்பதற்காகவே முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை எதிர்த்து நின்றனர். ‘இனவாதத்தை ஒழிப்பதாக’ மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா அம்மையார் எல்லோரும் கூட்டாக சொன்னதை நம்பியே இவ்வாறு வாக்களித்தனர்.

ஆனால் அந்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்பது பட்டவர்த்தனமானது. நாட்டில் சற்று அடங்கியிருந்த வன்போக்கு இனவாதம் மென்போக்கு இனவாதமாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. புதிய பாணியில் முஸ்லிம்களை இலக்கு வைத்தது. திகணவில், அம்பாறையில், பின்னர் வடமேல் மாகாணத்தில் என்று வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மிகவும் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொப்பிபோட்டு, தாடி வைத்தவர்கள் என்பதற்காக மேற்குறிப்பிட்ட இனவாத ஒடுக்குமுறையை ஒருக்காலும் நியாயப்படுத்தி விட முடியாது. அத்துடன் இத்தாக்குதல் இடம்பெற்றது மிக அண்மையில்தான். இனவாதம் அதற்கு முன்னரே வீறுகொண்டெழுந்து விட்டது.

ஆக, இந்தப் பின்னணியில் இனவாதத்திற்கு ஆட்சியாளர்கள் யார் என்பது முக்கியமில்லை என்பதையும் எல்லா ஆட்சியாளர்களும் மூக்கணாங்கயிற்றை பேரினவாதத்திடமே கொடுத்திருக்கின்றார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டார்கள். அத்துடன், இனவாத நெருக்குவாரங்களை கையாளும் விடயத்தில் முன்னைய அரசாங்கமும் இன்றைய அரசாங்கமும் ‘ஒன்றுதான்’ என்ற மனோநிலையும் ஏற்பட்டது.

பொதுவாக இலங்கையின் கடந்த இரு தசாப்தகால அனுபவத்தை மீட்டிப் பார்க்கையில், சுமார் 10 வருடங்களுக்கு ஒரு தடவையே மக்கள் ஆட்சியாளர்களை மாற்றுவது பற்றிச் சிந்தித்து வந்திருக்கின்றார்கள். ஆனால், இம்முறை அரசாங்கத்தையோ அல்லது முக்கியமான ஆட்சியாளர்களையோ மாற்றுவது பற்றிய பிரக்ஞை ஐந்து வருடங்களுக்குள்ளேயே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

இனவாதத்தை கட்டுப்படுத்தி நாய்க்கூண்டில் அடைத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தல், கொலைக் குற்றவாளிகள் மற்றும் நாட்டை சூறையாடியவர்களை தண்டித்தல், இனப் பிரச்சினை தீர்வு, பொருளாதார மீட்சி உள்ளடங்கலாக இந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இந்த நிமிடம் வரை நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, முஸ்லிம்கள் எதற்காக மஹிந்தவை நிராகரித்தார்களோ எதற்காக மைத்திரியையும் ரணிலையும் சிம்மாசனம் ஏற்றினார்ளோ அந்தக் காரியம் திருப்திப்படும் விதத்தில் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமையாலேயே இன்னுமொரு தேர்தல் பற்றிய பிரக்ஞையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

ஆட்சியின் வீழ்ச்சி

இது இவ்வாறிருக்க, இன்றைய ஆட்சி ஒன்றுமே சாதிக்காமல் காலத்தை கடத்திய சமகாலத்தில், இனவாதத்தின் விடயத்தில் இரண்டு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்ற தோற்றப்பாட்டையும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தினாலும் நாட்டில் இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அரசியல் நகர்வில் மகிந்த அணியின் குறிப்பிடத்தக்க உளவியல்சார் வெற்றியாக இதைச் சொல்ல முடியும்.

இனவாதத்தை ஒழிப்போம் என்றும், வசீம் தாஜூடீன், லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் மரணங்கள் மற்றும் வெள்ளை வேன் கடத்தல்களை விசாரிப்போம் என்றும், சட்டவிரோதமாக செயற்பட்டவர்களை சிறையிலடைப்போம் என்றும் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், ஒரு அரசியல் சுழிக்குள் சிக்க வைக்கப்பட்டது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி இதில் முதன்மைக் காரணமாகும். ராஜபக்ஷ அரசாங்கம் கொள்ளையடிக்கின்றது என்று குற்றச்சாட்டு சொன்னவர்களின் ஆட்சியில் பென்னம்பெரிய ஊழல் இடம்பெற்றது. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் கதை வேறுமாதிரி அமைந்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை என்பது மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுக்கும் அத்திவாரமிட்டது.

இப்படியே, மத்திய வங்கி மோசடி, இனவாத குழப்பங்கள், 52 நாள் நெருக்கடி, பயங்கரவாத தாக்குதல்கள், அதிகாரப் போட்டி என ….. இன்றைய அரசாங்கத்தின் காலமும் கடந்து விட்டது.
உண்மையில் இவ்வரசாங்கம் மக்கள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமான அரசாங்கமாக இருந்திருக்கும் என்றால், அடுத்த ஐந்து வருடத்திற்கும் ஆள்வதற்கான மக்கள் ஆணை மிக இலகுவாக கிடைத்திருக்கும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் மக்கள் கண்ணைமூடிக் கொண்டு வாக்களித்திருப்பர்.ஆனால், இன்று அந்த நிலையில்லை என்பதே இன்று ஏற்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சலசலப்புக்களுக்கு காரணமாகும்.

தவிர, கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக நியமிக்கப்பட்டதனாலோ அல்லது மஹிந்த தரப்பின் வெற்றிக்கான சமிக்கையாகவோ இந்த சலசலப்புக்கள் ஏற்படவில்லை என்பதை நினைவிற் கொள்க.

வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி கோத்தாபய ராஜபக்ஷவை தமது கட்சிசார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இத் தேர்தலில் எவ்வாறான வியூகத்தை வகுக்கப் போகின்றது என்ற ஆவலும் ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பரவலான உட்கட்சி அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுதவிர கருஜயசூரிய போன்ற வேறு ஓரிருவரின் பெயர்களும் அடிபடுகின்றன. நாட்டு மக்களின் மனோநிலை மற்றும் எதிர்தரப்பு வேட்பாளரின் கனதி என்பவற்றைக் கொண்டு, புதிய ஒரு வேட்பாளரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கலாம் என்று நம்பப்படுகின்ற போதும், அது இன்னும் நடக்கவில்லை.

இதேவேளை சுதந்திரக் கட்சியானது மொட்டு அல்லது யானையுடன் கூட்டணி சேருமா? அன்றேல் தனியான வேட்பாளரை களத்தில் இறக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளரை செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கும் என்று அக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மிகப் பிந்திய தகவலின்படி ஜே.வி.பி.தனது வேட்பாளராக அனுர குமார திசாநாயக்கவை அறிவித்துள்ளது.

உண்மையில், மஹிந்தவின் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது என்பதற்காக ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் இரவோடு இரவாக தமது வேட்பாளர்களை பெயரிட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இருப்பினும், எழுகின்ற பரபரப்பை கட்டுப்படுத்துவதற்காக, காலத்தை இழுத்தடிக்காமல், வேட்பாளரை மக்களுக்குச் சொல்ல வேண்டிய தர்மசங்கடநிலை உருவாகியுள்ளதாக சொல்ல முடியும்.

மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுண கட்சியானது கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் என்றே ஆரம்பத்தில் அனுமானிக்கப்பட்;டது. ஆயினும், இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்காக தமிழர்களும் இனவாதத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற ஆத்திரத்தில் முஸ்லிம்களும் கோத்தபாயவை வேறு விதமாகவே நோக்குகின்றனர் என்ற அடிப்படையில், வேறு யாராவது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவியது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறும் பொருட்டு பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ அல்லது சிராந்தி ராஜபக்ஷ ஆகியோரில் யாரேனும் பெயர் குறிப்பிடப்படலாம் என்றும், ராஜபக்ஷ குடும்பத்தின் ‘உள்வீட்டு அரசியல்’ இதில் தாக்கம் செலுத்தலாம் என்றும் ஊகிக்கப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவே அறிவிக்கப்பட்டுள்ளார்.

புழுதுபடிந்த பழைய வழக்குகளில் உயர்மட்ட கவனம் குவிகின்றமை, அமெரிக்க பிராஜாவுரிமை நீக்கியோர் பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லையெனக் கூறப்படுகின்றமை, சு.க.வுடன் சாத்திமுள்ள கூட்டு போன்ற இன்னோரன்ன காரணங்கள் காணப்பட்டாலும், மாற்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. எனவே, பொதுஜன பெரமுணவின் இப்போதைய வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவே என்ற அடிப்படையிலேயே நிலைமைகளை நோக்க வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம்களின் நிலைப்பாடு

சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்க வேண்டுமென கவலைப்படாதவராக அறியப்பட்ட கோத்தபாயவை, அண்மையில் புளொட் தலைவரான சித்தார்த்தன் எம்.பி. சந்தித்தபோது, அவர் மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியதாக ஆரம்பத்தில் தகவல்கள் கசிந்திருந்தன. ஆனால், அச்செய்தியை மறுத்துரைத்த கோத்தா தரப்பு, ‘அனைத்து இலங்கையர்களாலும் அவர் தெரிவு செய்யப்படுவதையே விரும்புவதாக’ குறிப்பிட்டிருந்தது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நிஜ அரசியல்வாதியாக ஆகத் தொடங்கியிருக்கின்றார் என்பதே இதன் உள்ளர்த்தமாகும்.

ஆக மொத்தத்தில் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அனைத்து பெரும்பான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களும் சிறுபான்மை மக்களின் ஆதரவை வேண்டி நிற்கப் போகின்றார்கள். அப்படியாயின், சிறுபான்மையினங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இது தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.

அப்படிப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் நியமிக்கப் போகின்ற வேட்பாளர்கள் யார் என்பதைப் பொறுத்தே யார் வெற்றி பெறுவார் என்பதையும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதையும் ஊகிக்கக் கூடியதாக இருக்கும். சஜித் போன்ற ஒருவரை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நியமித்தால் ஒரு பலமான போட்டியை ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான ஒரு முடிவை எடுத்து மக்கள் ஆதரவற்ற ஒருவரை வேட்பாளராக பிரேரிப்பாராயின், அது கோத்தாவுக்கே சாதகமாக அமையும் என்பதை மறந்து விடக் கூடாது.

மஹிந்தவை தோற்கடித்ததைப் போன்று, தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தம்மை தோற்கடித்து விடுவார்களோ என்ற பயம் அமெரிக்க ஆதரவுடன் வந்திருக்கின்ற கோத்தாவுக்கு மட்டுமல்ல, ஐ.தே.க. மற்றும் சு.க.சார்பாக களமிறங்கும் வேட்பாளர்கள் எல்லோருக்குமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே முஸ்லிம்கள் மிகவும் பக்குவமாக நிலைமைகளை கையாள வேண்டும்.

முதலாவது விடயம், இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஒரேயொரு வேட்பாளரே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் எனவே அவசரப்படத் தேவையில்லை. அத்துடன் எல்லோருக்கும் ஆறாம் அறிவு இருக்கின்றது. எனவே இந்த அறிவைப் பயன்படுத்தி, எந்த அரசியல்வாதி, கட்சி ஒப்பீட்டளவில் சிறந்தது, எந்தப் பேய் கொஞ்சம் பரவாயில்லை என்பதை பொது மக்களே சுயமாக தீர்மானிக்க வேண்டும். மாறாக, முஸ்லிம் கட்சிகளின் பம்மாத்து கதைகள் மற்றும் மாயைகளுக்குப் பின்னால் போக வேண்டிய அவசியம் கிடையாது.

ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைப்பதில் உள்ள ஆபத்தை முன்னுணர்வதுடன், அடுத்த ஜனாதிபதியின் அதற்குப் பின்னரான புதிய ஆட்சியிலும் முஸ்லிம்கள் பங்காளியாவதை உறுதிப்படுத்தும் விதத்தில் காலடிகளை எடுத்து வைக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகமானது கவர்ச்சி அரசியலுக்காகவும், ஏதாவது மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் போதும் என்ற நினைப்பிலும் தேர்தலை எதிர்கொள்ளாமல், தமது நீண்டகால அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கருதி, காத்திரமான நகர்வுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமானது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 18.08.2019

Related posts

Leave a Comment