தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளிவந்தபின் வீரர்கள் குறித்தும், இந்திய அணியின் வெற்றி, தோல்விகள் குறித்தும் நடைபெறும் விவாதங்களில் பிரதானமாக இருப்பது தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்படும் கேள்விகள் தான்.

தோனியோ, அணி நிர்வாகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கிரிக்கெட் பேச்சுகள் அனைத்தும் இதை ஒட்டியே அமைந்துள்ளன.

இந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அணி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளனர்.

“15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருப்பினும் 11 பேர் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவார். இளம் வீரர் ரிஷப் பந்துக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார்” என்று கூறியுள்ளனர்.

ரிஷப் பந்தை விட தினேஷ் கார்த்திக் மூத்தவர். இருப்பினும் உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.

“ரிஷப் பந்துக்கு தற்போது 22 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடருக்குள் அவர் விக்கெட் கீப்பராக தன்னை அணியில் நிலைநிறுத்திக்கொள்ள அவகாசம் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் வரை ஓய்வை அறிவிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது

Related posts

Leave a Comment