மக்கள் பிரதிநிதிகளின் தகுதியும் இலட்சணமும்

 

‘யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்காக வற்புறுத்தப்படவில்லை, அமைச்சராக வருவதற்காக கட்டாயப்படுத்தப்படவில்லை. மிகப் பெரும் வரப்பிரசாதங்களைக் கொண்ட அந்த வகிபாகத்தை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றீர்கள் என்றால் நீங்கள் அதனோடு சேர்த்து பெரிய பொறுப்புக்களையும் எடுத்துக் கொள்கின்றீர்கள்’ என்று பிரிட்டனின் பிரபல அரசியல்வாதியும் கல்வி இராஜாங்க செயலாளராக பதவி வகித்தவருமான மைக்கல் கூவ் ஒரு தடவை சொன்னார்.

இந்த கருத்துநிலையில் நின்று பார்த்தால் நமது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பிரதிநிதித்துவ அரசியலில் இருக்கின்ற நபர்களின் பொறுப்புடைமையும் பொறுப்புக்கூறும் தன்மையும் எந்தளவுக்கு இருக்கின்றது என்பது கண்கூடு. அத்துடன், பாhரளுமன்றத்திலும் அரசியல் பரப்பிலும் சில அரசியல்வாதிகள் காட்டுகின்ற ‘கூத்துக்கள்’ அவர்களது ஒப்பனைகளைக் களைத்து, அவர்களுடைய தகுதியையும் ஒழுக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன.

ஒவ்வொரு பதவிக்கும் ஒரு அந்தஸ்து இருக்கின்றது. அந்த பதவிக்குண்டான கௌரவத்தையும் தகுதியையும் பக்குவத்தையும் கொண்டிருக்கின்ற நபர்கள்தான் பதவி வழியாக மதிக்கப்படுகின்றார்கள்.

ஒரு பெரிய செல்வந்தரோ அறிவாளியோ வீதியில் மதுபோதையில் விழுந்து கிடந்தால் அவரை வேறு கண்ணோட்டத்திலேயே சமூகம் பார்க்கும். ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் என்றால், இனி அவரிடம் கற்பதற்கு யாரும் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள். எந்தப் பெரிய மார்க்க போதகர் என்றாலும் சமூக விரோத காரியம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டார் என்றால் அதன்பிறகு அவரது சமூக அந்தஸ்து பூச்சியமாகி விடும்.

உண்மையில் கள்வனாக இருந்து கொண்டு களவெடுப்பவனை, சண்டியனாக இருந்து கொண்டு சண்டித்தனம் பேசுபவனை விட, நல்லனவனாக பட்டாடை அணிந்து கொண்டு திரிந்தவாறு முகம் சுழிக்கும் காரியங்களில் ஈடுபடுகின்றவர்களே ஆபத்தானவர்கள். இவர்களது இமேஜ் விழுந்தால் விழுந்ததுதான். ஒருக்காலும் மீள தூக்கி நிறுத்த முடியாது.

உயர் எழுத்தறிவு

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற அதேநேரத்தில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் போதிக்கப்படுகின்ற நமது நாட்டில் எந்த மத போதனைகளாலும் சீர்படுத்த முடியாத ஒழுக்கம் கெட்ட மனிதர்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றார்;கள். இலவசக் கல்வி வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட வயது வரையான கல்வி கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டும் இருக்கின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில், 92 வீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவையும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்களையும் கொண்ட நாடாக அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிய கேள்விகள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. ஆனால் இங்கு தகுதி என்பது எழுத்தறிவோ, பாடசாலைக் கல்வியோ மட்டுமல்ல என்பதை கவனிக்கவும்.

உலகின் பல நாடுகளின் பாராளுமன்றத்திற்குள் முரண்பாடுகள் வருவதும் உறுப்பினர்களிடையே சண்டை வருவதும் வாடிக்கைதான். நமது நாட்டுப் பாராளுமன்றத்திலும் இதனைப் போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் இடம்பெறாமல் இல்லை. ஆனால், இப்போது இலங்கையில் அரசியல் அதிகாரப் போட்டியும் அதன் வழிவந்த நெருக்கடியும் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உயரிய சபைக்குள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாட்டு மக்கள் நேரலையாகவே பார்த்து தலைகுனிந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாராளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதென்பது ஒரு பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற இலங்கையில் 225 பேருக்குத்தான் இந்த வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்த 225பேரில் 196பேர் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மீதமுள்ள 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் செய்யப்படுகின்றார்கள். இந்தப் பதவியின் பெறுமதியை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதற்கு இதுவே போதுமானது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று விஷேட சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கௌரவமும் சமூக அந்தஸ்தும் இருக்கின்றது. ஆனால் இந்தப் பதவிக்குண்டான தகுதியுடன் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்படுகின்றனரா என்பதும் தகுதி இருந்தோ இல்லாமலோ மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற எல்லா எம்.பி.களும் அதன் தார்ப்பரியத்தை காப்பாற்றும் விதத்தில் நடந்து கொள்கின்றனரா என்பதும் நம்முன்னுள்ள கேள்விகளாகும்.
சிரமமான தொழில்

நாம் எப்போதும் அரசியல்வாதிகளின் பக்கம் நின்று விடயங்களைப் பார்ப்பதில்லை. மக்களின் பக்கத்தில் நின்றே அவர்களை நோக்குகின்றோம். ஆனால், அரசியல்வாதிகளின் பக்கத்திலுள்ள யதார்;த்தங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அளவுக்கதிமான எதிர்பார்ப்பையும் கண்மூடித்தனமான வழிபாட்டு அரசியலையும் மக்கள் செய்யாமல் இருப்பதற்கு இது மிக அவசியமாகும்.

உண்மையில் அரசியல் என்பது மிகச் சிரமமான தொழில் என்பதில் இருவேறு கருத்துக்களில்லை. தூக்கமில்லாமல் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பல பிரச்சினைகளை கவனிக்க வேண்டும், பலருக்குப் பதில் சொல்ல வேண்டும். வடிவேலுவின் காமடிபோல், ‘என்ன நடந்தாலும் ஒன்றுமே நடக்காத மாதிரியான’ ஒரு கம்பீர தோற்றத்தை வெளியில் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தேனீர்க்கடை இருக்கைகளில் அமர்ந்து கொண்டு நம்மவர் பேசுவதைப் போல, அரசியல்வாதியாக இருத்தல் என்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல.

ஆனால், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அரசியல்வாதியின் கருத்துப் போல, யாரும் எம்.பி.யாக வருவதற்கு வற்புறுத்தப்படவில்லை. அதனையும் மீறி நீங்கள் அதனைத் தெரிவு செய்தால் அதிலுள்ள வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்ற அதேநேரத்தில் அப் பதவியின் பொறுப்பையும் நிறைவேற்றியே தீரவேண்டும். ஒழுக்கமும் நாகரிகமும் பக்குவமும் இருக்க வேண்டும். இத்தனை தூரம் எழுத்தறிவுள்ள ஒரு நாட்டில் அடிப்படைக் கல்வியறிவும் நடைமுறை அறிவும் இருப்பது சிறப்பு.

அந்த வகையில், இலங்கைப் பாராளுமன்றத்தில் அண்மைக்காலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு நானும் நீங்களும் சாட்சிகள். அங்கு நடக்கின்ற சில நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது குக்கிராமங்களில் நடக்கும் ‘பொம்புளச் சண்டைகள்’ ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாதுள்ளது.

கூச்சல் குழப்பங்கள் எல்லாம் ஒருபுறமிருக்கத்தக்கதாக, கத்தி போன்ற ஒரு ஆயுதத்துடன் ஒரு எம்.பி. தள்ளுமுள்ளுப்படுகின்றார். சபாநாயகரின் கதிரைக்கு ஒருவர் நீர் ஊற்றுகின்றார். ஒருவர் ஒலிவாங்கியை உடைத்து கையை காயப்படுத்திக் கொள்கின்றார். கொச்சிக்காய்த்தூள் வீசப்படுகின்றது, கதிரையைத் தூக்கி எறிகின்றார்கள். நாட்டின் உயரிய சபையில் தகாத வார்த்தைகளும் செய்கைகளும் வெளிக்காட்டப்படுகின்றன. நாம் கட்டிக் ;காத்ததாகச் சொல்கின்ற ஒழுக்கமும் பாரம்பரிய கலாசார விழுமியங்களும் சந்தி சிரிக்கின்றன.

முன்னமே சொன்னது போல் அமெரிக்கா முதற்கொண்டு உகண்டா வரையான பல நாடுகளின் பாராளுமன்றங்களில் இப்படியான அமைதியின்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது சில வேளைகளில் தவிர்க்க முடியாததும் கூட. ஆனால், ‘எல்லா நாடுகளிலும் நடப்பதுதானே எனவே இது பரவாயில்லை’ என்று இருந்துவிட முடியாது என்பதே இங்கு அழுத்தமாக உரைக்கப்பட வேண்டியது. இதற்கு இடமளித்தால் இலங்கைப் பாராளுமன்றத்தில் இதுவும் ஒரு கலாசாரமாக மாறிவிடும்.

கல்வி மட்டுமல்ல

இந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிய விமர்சனங்கள், கண்ணோட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. தகுதியில்லாதவர்களை சபைக்கு அனுப்பியதால் வந்த வினை எனச் சிலர் கூறுகின்றார்கள். உண்மையில் நாட்டின் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரமோதலே இதற்கு அடிப்படைக் காரணமாகும். ஆனால், தகுதி என்று பார்த்தால் அது உண்மையில் கல்வித் தகுதி மட்டுமல்ல மாறாக ஒரு மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக செயற்படுவதற்காக அந்த எம்.பி. கொண்டிருக்க வேண்டிய எல்லா இலட்சணங்களுமே தகுதி என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் அறிஞர்களும் கல்விமான்களும் அரச (றோயல்) குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கின்றார்கள். இப்படியான பலர் இன்றும் உள்ளனர். பெரிய கல்வியறிவோ காகித தகமைகளோ இல்லாத மேதைகளையும் சமூக சிந்தனையாளர்களையும் நாம் கண்டிருக்கின்றோம். அரசியலை விரும்பாத, வாக்கு வங்கிகளைக் கொண்டிராத – ஆனால், பாராளுமன்றத்தில் ‘இவரைப் போன்றவர்கள் இருக்க வேண்டும்’ எனக் கருதப்படும் நபர்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தேசியப்பட்டியல் நியமன எம்.பி. முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தபட்பட்டது

ஆனால் கடந்த இரு தசாப்தகாலத்தில் இந்த இலட்சணங்கள் இல்லாத பலர் தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி.க்களாக ஆகியிருக்கின்றனர். மறுபுறுத்தில், மக்களும் – கட்சிக்காகவும் வேறு ஆளில்லை என்ற நிலையிலும் கண்மூடித்தனமாகவும் பொருத்தமில்லாத பலரை தமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பது கவனிப்பிற்குரியது.

ஆச்சரியமான தகவல்

இந்தப் பின்புலத்தில், கடந்த சில வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்விசார் தகுதிகள் பற்றிய பல்வேறு தரவுகள் வெளியிடப்பட்டு வருவதுடன், கணிசமானோர் குறைந்த மட்ட கல்வித் தரத்தை கொண்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள, அடிப்படை கல்வித் தகுதியுள்ளவர்களையே பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், மாறாக சண்டியர்கள், ஊழல் புரிந்தவர்கள், சமூக விரோதிகளை அவ்வுயரிய சபைக்கு தெரிவு செய்யக் கூடாது என்றும் மக்கள் செயற்பாட்டாளர்கள் கோரி வருகின்றனர்.

நமது நாடாளுமன்றத்தில் இப்போதும் தலைசிறந்த, மக்கள் வியந்து பார்க்கும், உயரிய கல்வித் தகமைகைள் கொண்ட, சமூக சிந்தனையாளர்கள் எம்.பி.க்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக சுமார் 15 சட்டத்தரணிகள், 3 இற்கு மேற்பட்ட பொறியியலாளர்கள், வைத்தியர், கலாநிதி மற்றும் நிர்வாக சேவை அதிகாரி உள்ளடங்கலாக அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் உயர் பதவிகளை வகித்தவர்கள், கல்விமான்கள் எனப் பெருமைப்படும் விதத்திலான ஆளுமைகள் பலர் உள்ளனர் என்பதை யாரும் மறுக்கவியலாது.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் க.பொ.த. உயர்தரம் சித்தியடையாதவர்களாக உள்ளனர் என்ற தகவலை ஒரு பேராசிரியரை மேற்கோள்காட்டி அரசாங்க ஊடகம் ஒன்றே செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் உயர்தரம் சித்தியடையாதவர்கள் என்ற செய்தி வெளியானது. ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கான அடிப்படைக் கல்வி வரையறைகள் அரசியலமைப்பில் இல்லை என்றாலும், நாம் யாரால் ஆளப்படுகின்றோம் என்பதை மக்கள் மீள்வாசிப்புச் செய்யும் நிலைக்கு இத்தகவல்கள் இட்டுச் சென்றன.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றம் அல்லோலகல்லேப்பட்ட நிலையில், ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து முகம்சுழித்த நாட்டு மக்கள் இவர்களின் தகுதிகள் மற்றும் இலட்சணங்கள் குறித்து அங்கலாய்த்துக் கொண்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் தகுதியுடையோரை அச்சபைக்கு அனுப்பி அதன் மதிப்பை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதுபற்றி பாராளுமன்றத்திலும் ஒரு முஸ்லிம் எம்.பி.யினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சட்;ட ஏற்பாடு

இலங்கையில் யார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படலாம் என்று அரசியலமைப்பு கூறுகின்றது. வேட்பாளராக இருக்கின்ற எந்தவொரு நபரும் அரசியலமைப்பின் 91ஆவது அத்தியாயத்தில் விதந்துரைக்கப்பட்ட விஷேட ஏற்பாடுகளின் கீழ் தகமையற்றவராக ஆகாத பட்சத்தில் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட தகுதியுடையவர் என்ற சட்ட நியதியே காணப்படுகின்றது. அதன்படி அவ்வாறு நியமிக்கப்பட முடியாத 5 விதமான நபர்கள் பற்றி 91ஆவது அத்தியாயம் விபரிக்கின்றது.

எவ்வாறிருப்பினும், கல்வித் தகைமைகள் பற்றி அரசியலமைப்பில் நிபந்தனைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு பிரதான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் என்பது மக்கள் பிரதிநிதி. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற, மக்கள் செல்வாக்குள்ள நபர். எனவே அங்கு முக்கியமானது மக்கள் ஆதரவு என்றபடியால் எம்.பி.களுக்கு அடிப்படை கல்வித் தகமை வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க முடியாது. அப்படிச் செய்தால் ஒரு பிரதேசத்தில் உள்ள அந்தத் தகமையை பூர்த்தி செய்யாத ஆனால் சமூக சிந்தனையும் ஒழுக்கமும் உள்ள ஒருவரைக் கூட மக்களால் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க முடியாமல் போய்விடலாம் என்று அன்றைய சட்ட வரைஞர்கள் கருதியிருக்கலாம். ஆனால், இந்த வாய்ப்பை பிற்காலத்தில் சில தவறான பேர்வழிகளும் பயன்படுத்தி, பாராளுமன்றத்துக்கு வந்தார்கள், வந்திருக்கின்றார்கள் என்பதே துரதிர்ஷ்டவசமானது.

ஆனால் தகமை அல்லது தகுதி என்பது கல்வித் தகைமை மாத்திரமல்ல என்பதையும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். இங்கே ‘தகுதி’ என்று பேசுபவர்கள் என்ன அர்த்தத்தில் பேசினாலும் கூட அது வெறுமனே புத்தகப் படிப்பாக, காகித தகைமைகளாக மாத்திரம் இருக்க முடியாது. அதற்கும் காரணமுள்ளது.

தகுதி என்பது

படித்தவர்கள், புத்திஜீவிகள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் நாட்டில் உள்ளனர். இவர்களுள் சிறந்த சமூக செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் மிகச் சிலரே. ஆதில் ஒரு பகுதியினரே அரசியலுக்குள் வர விரும்புகின்றனர். குறிப்பாக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்ற படித்தவர்களின் கணிசமானோர் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதில் முன்னிற்பதில்லை. எனவே இப்பேர்ப்பட்டவர்களை படித்தவர்கள் என்ற காரணத்திற்காக, மக்கள் பிரதிநிதியாக ஆக்க முடியாது.

அதேபோல் பட்டதாரிகள் மற்றும் மேற்படிப்பு படித்த கணிசமானோருக்கு பொது வாழ்வு பற்றிய அறிவும், மக்களோடு நல்லுறவும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம். இதனால் அவ்வாறானவர்களை மக்கள் அங்கீகரிப்பதும் இல்லை. அத்துடன், அரசறிவியல் படித்த ஒருவர் நன்றாக அரசியல் செய்வார் என்று நம்பவும் முடியாது. ஏனெனில் நிறையப் பேர் புத்தகப் பூச்சிகளாகவே இருப்பதால், அவர்களால் நடைமுறை யதார்த்திற்கு ஈடுகொடுக்க முடியாது போய்விடுகின்றது.

சுருங்கக் கூறினால் கற்காத மேதைகளையும் சமூக சிந்தனையாளர்களையும் நல்ல அரசியல்வாதிகளையும் வரலாறு கண்டிருக்கின்றது. அளவுக்கதிகமாகக் கற்று, அதனை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல், பணம் உழைப்பதிலும் பெருமை பேசுவதிலும் காலத்தைக் கழித்த எத்தனையோ பேரை நாமறிவோம். எனவே இங்கு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் பிரதான நிபந்தனையாக கல்வித் தகமையை பரிந்துரை செய்வது உசிதமானதல்ல.

பெருந்தொகை கொடுப்பனவு
இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தற்போதைய
#சம்பளம் 54285 ரூபாவாகும். அமைச்சர்களுக்கு இதைவிட அதிகம். இதுதவிர
#அலுவலகத்திற்கான கொடுப்பனவு (ரூ 100,000), #தபால்செலவு (ரூபா 175000),
#தொலைபேசி கொடுப்பனவு (ரூபா 50000) உள்ளடங்கலாக,
#எரிபொருள் கொடுப்பனவு,
#அமர்வுக் கொடுப்பனவு,
#சாரதிகள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களிற்கான கொடுப்பனவுகள் என பெருந்தொகை கொடுப்பனவுகள் எம்.பி.களுக்கு வழங்கப்படுகின்றது.
#இதைவிட பெறுமதியான கௌரவத்தையும் அவர்கள் பெறுகின்றனர்.

எனவே, அவர்கள் தகுதியுடையோராக இருக்க வேண்டும். ஆனால் தகுதி என்பது பட்டமோ உயர்கல்வியோ அல்ல. மாறாக, ஒரு குறிப்பிட்ட மட்டத்திலான பாடசாலைக் கல்வியுடன் ஏனைய முக்கிய தகுதிகளான ஒழுக்கம், கலாசார விழுமியத்தை பேணுதல், நன்னடத்தை, சமயப்பற்று, பக்குவம், மொழியறிவு, சமூக சிந்தனை, தைரியம், உலக அறிவு, பணத்தில் மட்டும் குறியாக இருக்காமை, மக்கள் தொடர்பு என இன்னோரன்ன இலட்சணங்களையும் கொண்டிருக்க வேண்டும். இக் கட்டுரை தகுதி என்று குறிப்பிடுவது மேற்சொன்ன அனைத்துப் பண்புகளையுமே.

இவ்வாறானவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் கலாசாரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் மட்டுமன்றி பிரதேச சபைகள், மாகாண சபை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும் மக்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்கு முதலில், ஒழுக்கமும் ஏனைய அடிப்படைத் தகுதிகளும் இருப்பவர்களால் நாம் ஆளப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மக்களும் கொள்கை வகுப்பாளர்களும் வரவேண்டும்.

– ஏ.எல். நிப்றாஸ்

 

Related posts

Leave a Comment